முக்கடல் கூட்டி பேரலை முழங்கி
மூக்குத்தி அணிபூண்ட கன்னி அன்னையை வணங்கி
அழியா பொற்குறள் நெறிவகுத்த
அய்யன் வள்ளுவன் கற்சிலை தாள் வணங்கி
முச்சங்கத்து முதற்சங்கம் கூட்டிய
மூத்தக்குடி பெருமான் நினைவுகள் வணங்கி
விஞ்சிய கடல் விழுங்கிய பெருநிலத்தின்
எஞ்சிய குறுநிலத்து நின்று திமிறும் தமிழ் வணங்கி
இடநாடும் நாஞ்சில் திருநாடும்
இணைந்தமைந்த எம் மூதாதையர் மண் வணங்கி
பாடுவோம் குமரிநிலத்தாய் புகழ் ஓங்கி முழங்கி
முத்திசை சூழ்ந்து கடலலை ஆட
வடதிசை அரணாய் மேற்கு தொடர்மலை நிற்க
ஆரல்வாய்மொழி கணவாயில் தலைவாசல் வைத்த
நாற்றிணை நிலங்களணிந்தவள் நளினம் காணீர்
கோதையும் பரளியும் ஆரணி அலைந்து
கோமகள் தாமிரபரணியாய் தவழும்
கொள்ளை அழகுக்கு ஈடிணை ஏதோ
மூலிகை காப்பக மருந்துவாழ் மலையும்
அகத்திய சித்தர் வாழ்ந்த குகையும்
கொண்டவள் கோலப் பொலிவை காணீர்
இரப்பர் மரங்களும் மிளகுக் கொடிகளும்
தேனூறும் மா பலா வகைகளும் பலவாய்
தென்னையும் வாழையும் மரசீனிக்கிழங்கும்
அருகிய நெடுந்துயர் பனைமர நுங்கும்
அக்கானியும் அகம்குளிர் கள்ளும்
முப்போக நெல்லும் அன்னையின் அடையாளங்கள்
சுவையான மீனுக்கும்
சுத்தமான தேனுக்கும் சொந்தக்காரி
போர்மூண்ட குளச்சல் கடல்துறைமுகத்தில்
போர்த்துகீசியன் தலைகொய்த வெற்றித் தூணும்
கர்மவீரன் காமராசன்
கட்டிய தண்ணீர் தொட்டிப்பாலமும்
பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளும்
ஆழமான சானலின் கரைகளும்
புத்தேரியின் பெருங்குளமும்
தோவாளை பூச்சந்தையும்
சிவாலயங்கள் பன்னிரெண்டு
முருகனுக்கும் பலவுண்டு
பகவதி அன்னைக்கும்
நாகராஜனுக்கும் கோயில்களுண்டு
வங்காள சிங்கம் விவேகானந்த சுவாமிக்கும்
கடலிடை பாறையில் மண்டபம் கண்டாள்
தூய சவேரியாருக்கு கோட்டாறு ஆலயம்
தூய தேவ சகாயம் பிள்ளையின்
குருதி படிந்த திருத்தலங்கள்
நேசமணி போக்குவரத்து கழகம்
பயணியர் பையில் பொதிச்சோறும்
அழகுத்தனித்துவ வழக்காடு தமிழும்
நித்திலமே கேள் எம்மன்னையின் பெருமை
எத்தனையெத்தனை எவரறிவாரோ
ஆய் அரசாய் ஆண்டார் அவளை
வேணாடாய் ஆண்டார்
மூவேந்தர் முக்கோனும் மாறிமாறி ஆண்டார்
திருவிதாங்கோட்டு வர்மாக்கள் முடிவாய் ஆண்டார்
அந்நாளில் கயவர் சாதிப்படிநிலை செய்து
அன்னை தன் முலைமூட உரிமை மறுத்தார்
அய்யா வைகுண்டரை அவதரிக்க செய்து
சாமித்தோப்பில் சமபந்தி வைத்தாள்
நீலகண்ட பிள்ளையை பெற்று
காற்றாடி மலையில் பலியிடக்கொடுத்தாள்
நீண்டு நீண்ட ஆண்டுகளோடி
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறில்
தாய்வீட்டு சொந்தம் தேடிக்கொண்டாள்
மதம் இனம் கடந்து தன் மக்களையெல்லாம்
மகத்தாய் ஒற்றுமையில் காத்துவைத்தாள்
உலகதரமிக்க திறன்களை திரட்டி
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஊட்டிவிட்டாள்
உன்னதமிக்க மாவட்டமென்று
அன்னைக்கு பிள்ளைகள் மகுடம் செய்தனர்
மீண்டுமிதோ இங்கொரு நாளில்
அகங்காரம் கொண்டு சில மாந்தர் வந்து
மதமூட்டி பேதமை பகையுமூட்டி
அன்னையை ஆயர்குல வணிகருக்கு விற்று
ஆதாயம் தேட முற்படுங்கால்
அன்னையின் பிள்ளைகளாய் ஒன்றிணைவோம்
கன்னியின் வனப்பை காத்திடுவோம்
என்றுமென்றும் பாடிடுவோம் ஒன்றாய்
குமரிநிலத்தாய் புகழ் ஓங்கி முழங்கி.
Ref : ஆஸ்வால்ட் ஹோப்பர் (தோழர்)
அரவிந்த் த.